ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் க்ளேன் மேக்ஸ்வேல், 2017ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான வினி ராமனை காதலித்துவந்தார். இதனால், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் பரவின.
இதனை உறுதிசெய்யும் வகையில் வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போன மேக்ஸ்வெல் டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மனஉளைச்சல் காரணமாக சிறிது காலம் ஓய்வெடுத்துகொண்ட மேக்ஸ்வெல் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 தொடரில் கம்பேக் தந்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக இந்த சீசனில் 398 ரன்களை குவித்து அசத்தினார்.
இதன் பலனாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் இந்த தொடரிலிருந்து அவர் விலகினார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை ஏழு டெஸ்ட், 110 ஒருநாள், 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.
இதையும் படிங்க: கோலியை முந்தி முதலிடத்தைப் பிடித்த ஸ்மித்!