தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். இதில், அணியிலிருந்து நீக்கம் செய்யப்படும் வீரர்களுக்கு சரியான முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதை கவுதம் கம்பீர் முன்னிலைப்படுத்தி பேசினார். அவர் பேசியதாவது,
"2016 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அப்போது நான் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. அணியில் உள்ள கருண் நாயர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் இதே பிரச்னைதான் நடந்தது" என்றார்.
மேலும் அணியில் அம்பதி ராயுடுவிற்கும் என்ன நேர்ந்தது என்று பார்க்க வேண்டும். ஒருநாள் போட்டியில் இரண்டு ஆண்டுகளாக நான்காம் வரிசையில் விளையாடி வந்தார். ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் உங்களுக்கு 3டி வீரர் ( பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என முப்பரிமாண வீரர்) தேவைப்பட்டதா? ஒரு தேர்வுக்குழுத் தலைவரிடமிருந்து இதுபோன்ற கருத்துதான் நீங்கள் பார்க்க விரும்புவீர்களா என்ற கேள்வியை எம்.எஸ்.கே பிரசாத்திடம் எழுப்பினார்.
இதற்கு பிரசாத், அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பந்துவீச மாட்டார்கள். ஆனால் விஜய் சங்கர் போன்ற ஒரு வீரர் முன்கள வரிசையில் பேட்டிங் செய்வது மட்டுமின்றி இங்கிலாந்து ஆடுகளத்தில் நன்கு பந்தும் வீசுவார். அதன் அடிப்படையிலும் அவரது உள்ளூர் போட்டிகளின் செயல்பாடுகளின் அடிப்படையிலும்தான் நாங்கள் அவரை தேர்வு செய்தோம். எப்போதும் அனுபவத்தை வைத்து மட்டுமே வீரர்களை தேர்வு செய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், நீங்கள் பல வீரர்களை இழக்கலாம் என பதலளித்தார்.
இருவரது கருத்தையும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரிக்காமல், உள்ளூர் போட்டிகளிக்கும் சர்வதேச போட்டிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் இடம்பிடித்தார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் அணிக்கு பங்களிப்பு அளிக்க கூடிய 3 டி வீரர் விஜய் சங்கர் என அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, அம்பதி ராயுடு தான் 3டி கண்ணாடியுடன் உலகக்கோப்பை தொடரை பார்க்கப்போவதாக பதிவிட்டிருந்தார். பின் உலகக்கோப்பை தொடரில் தனக்கு இடம்கிடைக்காத விரக்தியில் ஜூலை மாதம் ஓய்வை அறிவித்த அவர் பின் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
இந்திய அணிக்காக அம்பதி ராயுடு 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு மூன்று சதங்கள்,10 அரைசதங்கள் உள்பட 1694 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டி20 போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம்: கவுதம் கம்பீர்