2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஐந்து நாள்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐசிசி சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதற்கு கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், மெக்ராத், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். அதில், "நான்கு நாள்களாக டெஸ்ட் போட்டி விளையாட வேண்டும் என்ற ஐசிசியின் யோசனை தேவையற்றது. இதற்கு யாரும் ஆர்வம் காட்டக்கூடாது.
பிசிசிஐயின் ஒப்புதல் இல்லாமல் ஐசிசியால் நான்கு நாள்கள் டெஸ்ட் போட்டியை நடத்தவே முடியாது. கங்குலி அறிவார்ந்த வீரர், அவருக்கு கிரிக்கெட் விளையாடிய அனுபவம் அதிகம் இருப்பதால் இதை நடக்கவிடமாட்டார். டெஸ்ட் போட்டி அழிவதையும் அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
ஐசிசியின் இந்த யோசனைக்கு எதிராக சச்சின், கோலி ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அணி வீரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். எனது சொந்த நாட்டிலிருக்கும் சிறந்த வீரர்களும் இதற்கு எதிராகப் பேச வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்.
டெஸ்ட் போட்டியை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எனது கருத்தைத் தெரிவிக்க விரும்பினேன். அதன்படி டெஸ்ட் போட்டிகளை அதன் தன்மையிலேயே (ஐந்து நாள்கள் போட்டி) நடைபெறுவதற்கு பாதுகாக்க நாம் அனைவரும் நமது குரலை எழுப்புவது மிகவும் அவசியமாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் எப்படி இருக்கும்: ஒரு பார்வை!