இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் கங்குலி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடனான அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கங்குலியின் இந்தப் பயணத்தின்போது நான்கு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார். மேலும் இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அலுவலர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், இது மேலும் தொடர்வது பிற விஷயங்களை பொறுத்தே உள்ளது என்றும் கூறினார்.
கடந்தாண்டு பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றுமொரு நாட்டைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களிலும் பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நான்கு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த பிசிசிஐயின் ஆலோசனையை செயல்படுத்த பிற ஐசிசி உறுப்பினர்களுடன் ஆலோசிப்பதற்குத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ், கங்குலியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மேலும், கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற குறைந்த காலகட்டத்திலேயே இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதை குறிப்பிட்ட அவர், கங்குலியின் நான்கு தேச தொடர் குறித்த ஆலோசனையை பாராட்டினார்.
கங்குலியின் ஆலோசனைபடி இந்தத் தொடருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புதல் அளித்தாலும் இதற்கு ஐசிசியும் ஒப்புதல் வழங்க வேண்டும். ஏனெனில் ஐசிசியின் எதிர்கால தொடர்களின் திட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் குறித்த திட்டம் ஏதும் இல்லை. இதே வேளையில் ஐசிசியின் எதிர்கால தொடர்களின் பட்டியலில் (2021 - 2023), ஆண்டுதோறும் ஒரு முன்மாதிரியான தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்காமல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!