பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்தக் குழாயினை விரிவுப்படுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.
அவரைப் பரிசோதித்த இதய நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து கங்குலி நேற்று (ஜன.6) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் ஒருநாள் மருத்துவமனையில் இருக்க கங்குலி விருப்பம் தெரிவித்ததையடுத்து, இன்று(ஜன.07) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று(ஜன.07) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் 2 முதல் 3 வாரங்கள் கங்குலி, அவரது வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சீரி ஏ: ஏசி மிலானை வீழ்த்தி ஜுவென்டஸ் அபார வெற்றி!