இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 14ஆம் தேதி பிசிசிஐயின் நிர்வாகிகள் பதவிக்கான வேட்பு மனுக்களை பெறுவதாக அறிவித்தது. இதில் பிசிசிஐயின் தலைவர் பதவிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாக சவுரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிசிசிஐயைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக பதவியேற்றார்.
இந்த பதவியேற்கும் நிகழ்வானது மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து 33 மாதங்களாக இருந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாடானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்தே தலைமையிலான இரு நபர் அமர்வு அளித்த உத்தரவில்,' புதிதாக பிசிசிஐ நிர்வாகிகள் பதவி ஏற்றவுடன், சி.ஓ.ஏ குழு பதவி விலக வேண்டும் என்றும், அவர்களுக்கான ஊதியத்தொகையான ரூ. 3.5 கோடியை பிசிசிஐ வழங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஞ்சி மைதானத்துக்கு ராணுவ ஜீப்பில் வந்த தோனி