மாற்றுத்திறனாளிகள் அணிக்கான இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டவர் தினேஷ் சைன். இவர் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் தற்போது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். திருமணம் நடந்து மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இவரின் குடும்பத்தை இவரது சகோதரர்தான் கவனித்து வருகிறார்.
இந்த ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி அவர் பேசுகையில்,'' என் குடும்பத்திற்கு நிரந்தரமான நல்ல வருமானம் கிடைக்க போராடி வருகிறேன். எனக்கு 35 வயது. 12ஆம் வகுப்புக்கு பின் கிரிக்கெட் மட்டும்தான் முழுநேரமும் ஆடினேன். எந்த வேலைக்கும் செல்லவில்லை. இந்திய அணிக்காக ஆடியிருக்கிறேன். ஆனால் என் கையில் பணமில்லை. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் ப்யூன் வேலை காலியாக உள்ளது.
இந்த வேலைக்கு சாதாரணமானவர்கள் 25 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம். மாற்றத்திறனாளிகள் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம். அதனால் அரசு வேலைக்கு, இதுதான் எனது கடைசி வாய்ப்பு.
நான் பிறந்ததிலிருந்தே போலியோவால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டது. ஆனால் நான் விளையாடும் கிரிக்கெட் ஒருபோதும் என்னை மாற்றுத்திறனாளி என நினைக்க வைக்கவில்லை. எனது உடல் எனக்கு எதிலும் தடையாக இருந்ததில்லை. ஆனால் எதிர்காலத்தில் எங்களை யார் கவனிப்பார்கள்?
நான் இனி கிரிக்கெட் விளையாட போவதில்லை. எனக்கு குடும்பத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும். அதேபோல் கிரிக்கெட்டுடனும் இணைந்திருக்க விரும்புகிறேன்'' என்றார்.
உலகிலேயே அதிகமாக பணம் ஈட்டும் நிறுவனத்தில் பிசிசிஐ-யும் ஒன்று. ஆனால் மாற்றத்திறனாளி அணிகளுக்கான தேவையையும், வீரர்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன் என்ற கேள்வி தினேஷ் சைன் மூலம் எழுந்துள்ளது.
இந்திய அணிக்காக ஆடும் ஒவ்வொரு வீரருக்கும் உரிய மரியாதையும், அவர்களுக்கான ஊதியத்தையும் பிசிசிஐ கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் சம்பளம் பட்டியல்!