இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமாக திகழ்பவர் பிஷன் சிங் பேடி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன் இருதய கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து பிஷன் சிங் பேடியின் உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்பின் அவரது மூளையில் இரத்த உறைவை அகற்றுவதற்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு பிஷான் சிங் பேடி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு பிஷான் சிங் பேடியின் உடல் நிலை முன்னேறி வருவதாக அவரது நெருங்கிய நண்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த பிஷான் சிங் பேடி,நேற்றைய தினம் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் சில நாள்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேறம் இருக்கிறது. விரைவில் அவர் குணமடைந்து விடுவார்” என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங் பேடி 273 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: உலக டேபிள் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!