லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜான் எட்ரிச் தனது 83 வயதில் காலமானார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) வெள்ளிக்கிழமை (டிச.25) தெரிவித்துள்ளது.
இடக்கை பேட்ஸ்மேனான ஜான் எட்ரிச், 1963 மற்றும் 1976ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 13 ஆண்டுகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.
77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜான் எட்ரிச், 5,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு போட்டியில் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல் பவுண்டரி மற்றும் அரை சதம் அடித்த பெருமையும் இவரையே சேரும்.
இவரின் மறைவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அலுவலர் டாம் ஹாரிஸன் கூறுகையில், “ உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரை இழந்துள்ளோம். நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் எடுத்த 310 ரன்கள், புகழ்பெற்ற கிரிக்கெட் ஸ்கோர் ஆகும்.
இது ஆங்கிலேய பேஸ்ட்மேன்களின் 5ஆவது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜான் எட்ரிச், சர்ரேக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் களமிறங்குவாரா புவி?