உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் பல உலக நாடுகளையும் தற்சமயம் அச்சுறுத்தி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளும் தேதி மாற்றம் செய்யப்பட்டும், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.
இந்நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. தற்சமயம் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், இங்கிலாந்து வீரர்கள் போட்டியின் போது வீரர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்க்கவுள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா பரவும் முறையின் காரணமாகவே நாங்கள் (இங்கிலாந்து அணி) வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கவுள்ளோம். தற்போது அதற்கு மாறாக வீரர்களுடன் ஃபிஸ்ட் - பம்ப்(Fist-Bump) முறையை, அதாவது கைகளின் முட்டிகளைக் கொண்டு இடித்துக்கொள்ளும் முறையை கடைப்பிடிக்கவுள்ளதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக வீரர்களின் பாதுகாப்பும் உறுதியாகும். மேலும் போட்டியின் போது வீரர்கள் ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதையும் இத்தொடரில் நாங்கள் தவிர்க்கவுள்ளோம்' எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இதேபோல் இலங்கை அணியும் தங்களது அணி வீரர்களை, உலக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளபடி, சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியும், அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வருகிற 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின், இந்த புதிய முறையை பல நாடுகளும் வரவேற்றுள்ளன.
இதையும் படிங்க:சச்சினின் சாதனையை உடைக்கப்போகும் விராட் கோலி!