ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமாக இருந்தவர் டேரன் லீமன். 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியதால் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராக விளங்குகிறார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டி/எல் முறைப்படி சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனிடையே இப்போட்டியின்போது டேரன் லீமனின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது மட்டுமின்றி அவரது
ட்விட்டர் பக்கத்தின் பெயரை அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானியாக மாற்றியுள்ளனர்.
லீமனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை சரிசெய்ய நாங்கள் ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றிவருகிறோம் என பிரிஸ்பேன் ஹீட் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்தத் தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம் என்றும் பதிவிட்டிருந்தது. ட்விட்டரில் டேரன் லீமனை மூன்று லட்சத்து 40 ஆயிரம் ரசிகர்கள் பின்தொடர்வதால், இவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி ஈரான் நாட்டிற்கு எதிராகத் தவறான கருத்துகளை ஹேக்கர்கள் பரப்பிவருகின்றனர்.
காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், டேரன் லீமனின் ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளிவரும் சர்ச்சையான கருத்துகள் மேலும் அச்சூழலை தவறான திசைக்கு எடுத்துச் செல்லும்விதமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியாக இருந்ததாக லீமன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது பெயரிலிருந்து வெளியாகும் மோசமான கருத்துகளைப் பார்க்கும்போது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்வரும் காலங்களில் சமூக வலைதளங்களிலிருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன்" என்றார்.
இவர் இறுதியாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திருட்டுவதற்காக அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் பதற்றமும், இந்தியாவும்!