வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி நான்கு ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 46.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 31 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசஃப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 181 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 77 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 95 ரன்களுடன் களத்திலிருந்த லூயில் மெக்கர்தி, வீசிய பந்தை கவர் திசையில் அடித்த ஷாட் சிக்சருக்குப் பதில் பவுண்டரிக்கு சென்றது.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எட்டி, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லூயிஸ் 99 பந்துகளில் 13 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், நான்கு போட்டிகள் கொண்டத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: சாதனைகளுடன் 2020ஆம் ஆண்டை தொடக்கிய ரன் மெஷின் கோலி!