இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டுநாயகேவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 42, ஒசாதி ரணசிங்கே 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆன்யா, கேட் கிராஸ், அலெக்ஸ் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய இங்கிலாந்து துவக்க வீராங்கனைகள் ஏமி எல்லன் 76, டேமி பியுமாண்ட் 63 எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்தனர். இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 26.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும், ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் பட்டியலில், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இந்த தோல்வி காரணமாக இலங்கை அணி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இரு அணிகளும் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. முதல் போட்டி வரும ஞாயிறன்று கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.