இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) சவுத் ஹாம்டனில் தொடங்கவுள்ளது. கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடங்கவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே, தனது மனைவிக்கு இரண்டாம் குழந்தை பிறக்க உள்ளதால் இப்போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் விலகினார். இதனால் அவருக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், ஜோஸ் பட்லர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இப்போட்டியில் பங்கேற்கும் 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டதில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகிய ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் இவர்களில் யாரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற சிக்கல் இங்கிலாந்து அணிக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அணியிலுள்ள மூத்தப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுலிங் பார்ட்னராக மார்க் வுட்டும், ஜோஃப்ரா ஆர்ச்சரும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் முதல் முறையாகத் தவறவிடுவார். இங்கிலாந்து அணி அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதால், வீரர்களுக்குத் தகுந்த ஓய்வளிக்க இங்கிலாந்து வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இப்போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில், தங்களது ஜெர்சியின் காலர் பகுதியில் 'Black Lives Matters' என்ற வாசகத்துடன் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.