இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், செளதாம்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்தத் தொடரில் 1-0 என்ற என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது. மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே இப்போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டதில் ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜோ ரூட் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், இதில் இடம்பெற்றிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி நேரத்தில் இப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செளதாம்டனிலிருந்து மான்செஸ்டர் செல்லும் வழியில் அவர் கரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன் விளைவாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், ஐந்து நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாள்களில் அவர் இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் விளையாடிய 11 வீரர்களுடனே இப்போட்டியில் களம் இறங்கியுள்ளது.
மறுமுனையில் இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜோ டென்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோருக்குப் பதிலாக ஜோ ரூட், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிவருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி ஏழு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், டாம் சிப்லி நான்கு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (இங்கிலாந்து), ஒலி போப், ஜாக் க்ராலி, பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட், டாம் பெல், கிறிஸ் வோக்ஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜான் கேம்பல், திரைக் பிராத்வெயிட், ஷமாரா ப்ரூக்ஸ், ஷாட் ஹோப், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளக்வுட், ஷேன் டாவ்ரிச், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), அல்சாரி ஜோசப், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்