டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியமிக்க போட்டியாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா வழக்கம்போல் விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடி 80 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் ஆட்டநாள் முடிவில் 313 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆர்ச்சர் மூன்று ரன்களுடனும், ஜாக் லீச் ஐந்து ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று தொடங்கி நடைபெற்று வரும் நான்காவது ஆட்டநாளில் இங்கிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் டார்கெட்டை செட் செய்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 94 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதுவரை இந்தத் தொடரில் பெரிதும் சோபிக்காத ஜோடி வழக்கம்போல் இம்முறையும் சொதப்பியது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் மார்கஸ் ஹாரிஸ் க்ளின் போல்டாகி ஒன்பது ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
மறுமுனையில், இருந்த வார்னர் வழக்கம்போல் பிராட்டின் பந்துவீச்சில் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இந்தத் தொடரில் வார்னர் பிராட்டிடம் அவுட் ஆவது இது ஏழாவது முறையாகும்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களின் முடிவில் 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மீண்டும் இக்கட்டான நிலையில், இந்தத் தொடரின் நாயகன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்து வருகிறார். சற்று முன்வரை ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்களை எடுத்துள்ளது. ஸ்மித் 12 ரன்களுடனும், மார்னஸ் லாபுக்ஸாக்னே 11 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 350 ரன்கள் தேவைப்பட்டாலும், கைவசம் எட்டு விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியை டிரா செய்ய வேண்டுமெனில், இன்னும் ஒன்றரை நாட்களை தாக்குப்பிடித்து விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி தாக்குப்பிடிக்குமா அல்லது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தத் தொடரை 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.