தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலே, சிப்லி ஆகியோர் களமிறங்கினர். கிராலே 4 ரன்களில் வெளியேற, பின்னர் டென்லியுடன் கூட்டணி அமைத்து சிப்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சிப்லி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஜோ ரூட் 35 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து டென்லி 38 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் பட்லர் 29 ரன்களிலும், சாம் கரண் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஓலி போப் நிதானமான ரன்குவிப்பில் ஈடுபட்டார். இங்கிலாந்து அணி 234 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், போப் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இறுதியில் போப் அதிரடியால் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்க அணியில் பிலாண்டர், ரபாடா, நார்டிஜ், ப்ரீடோரியஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நாளைய நாளின் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி, விரைவில் பேட்டிங் ஆட களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பும் டேல் ஸ்டெயின்!