இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு நியூசிலாந்து வீரரை இங்கிலாந்து அணி தங்கள் பக்கம் இழுத்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஜீத்தன் பட்டேலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீத்தன் பட்டேல் 2005 முதல் 2017 வரை நியூசிலாந்து அணிக்கா டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தமாக 78 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 130 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். வலதுக்கை சுழற்பந்துவீச்சாளரான இவர், தற்போது ப்ளங்கெட் ஷீல்ட் சீசன் தொடரில் விளையாடிவருகிறார். அவர் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளதால் நடப்பு சீசனில் அவர் மூன்று போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை இங்கிலாந்து சென்று ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பைனல் வரை சென்றும் ஐசிசியின் விதியால் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் வெற்றியை பறிகொடுக்க நேரிட்டது. ஆனால் இம்முறை பிளாக் கேப்ஸின் சொந்த மண்ணிற்கு இங்கிலாந்து அணி செல்கிறது.
எந்த அணியாக இருந்தாலும் தங்களின் சொந்த ஊரில் விளையாடும்போது சற்று கூடுதல் பலத்துடனேயே களமிறங்கும். எனவே நியூசிலாந்து அணியை சமாளித்து அங்குள்ள சூழல்களை புரிந்து கொண்டு ஆடும் நோக்கிலேயே அந்நாட்டு முன்னாள் வீரர்கள் இருவரை பந்துவீச்சு ஆலோசகராக இங்கிலாந்து அணி நியமித்திருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.