இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.14) கலேவில் தொடங்கியது.
முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிப்பதை அந்நாட்டு அரசு கடந்த மார்ச் மாதம் தடைவிதித்திருந்தது. தற்போது இலங்கையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால், பார்வையாளர்களின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது தேசிய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் பார்ப்பதற்காக பத்து மாதங்களாக காத்திருந்துள்ளார். இதனால் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது, அந்த ரசிகர் எந்த அனுமதியும் இன்றி மைதானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பாதுகாப்பு காவல் துறையினர் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அந்நபரை கைது செய்து மைதானத்திலிருந்து வெளியேற்றினர். அதன்பின் அந்நபரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் ராப் லீவிஸ் என்பதும், அந்நபர் முன்னதாக கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை - இங்கிலாந்து தொடரைக் காண்பதற்காக வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராப் லீவிஸின் கோரிக்கையை ஏற்று, மைதானத்தில் அரைமணி நேரம் மட்டும் போட்டியைக் காண காவல் துறையினர் அனுமதித்தனர். இருப்பினும் ராப் லீவிஸ், இலங்கை காவல் துறையிடம் தன்னை ஐந்து நாள்களும் மைதானத்தில் அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சரித்திரம் படைத்த 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' நடராஜன் தங்கராசு!