உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2-1 என புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளதால், கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதாகவே கருதப்படும்.
இந்நிலையில் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய், ஆல்-ரவுண்டர் ஓவர்டன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கழற்றிவிட்டுள்ளது.
இந்திய வீரர் சேவாக்கை போல் இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடுவார் என அந்நாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றமளித்தார்.
இவர்கள் இருவருக்கும் பதிலாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.