இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி (30) தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
”நானும் எனது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களின் கனிவான அக்கறைக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து உள்ளூர் அணியான யோர்க்ஷைர் அணியில் தற்போது டேவிட் வில்லி விளையாடிவருகிறார். வைடாலிட்ட பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கும் அவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 14 நாள்கள் கரோனா நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
யோர்க்ஷைர் அணியின் மற்ற வீரர்களான டாம் ஹேலர்-காட்மோர், ஜேஷ் பெய்ஸ்டன், மாத்யூ ஃபிஷர் ஆகியோரும் டேவி வில்லியுடன் தொடர்பில் இருந்ததை அடுத்து இந்த மூன்று வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இவர்களையும் யோர்க்ஷைர் அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.
வரும் திங்கள்கிழமை லான்சஸ்ஷைர் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து வில்லியுடன் சேர்த்து இவர்கள் மூவரும் விலக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்காக 49 ஒரு நாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வில்லி, 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதையும் படிங்க: மைதானத்தில் நிறவெறி குறித்த விமர்சனம்! - எதிரணி வீரரை அடித்த நெய்மர்