இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடர்ந்து, அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 207 ரன்களை எடுத்தது. பின்னர், 122 ரன்கள் பின் தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்களை சேர்த்தது.
இதனால், 182 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு ஆட்டத்தின் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் கேப்டன் வில்லியம் போர்டர்ஃபீல்டு இரண்டு ரன்களுடன் வோக்ஸ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 15.4 அதாவது 94 பந்துகளில் 38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் ஆறு, வோக்ஸ் நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது குறைந்த ஸ்கோரை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் மெக்கோலம் 11 ரன்கள் அடித்தார். அவரைத் தவிர மூன்று வீரர்கள் டக் அவுட், ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
ஒட்டுமொத்தமாக ஐந்து நாள் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி, மூன்றே நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது. இப்போட்டியில், 92 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணியின் நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் ஆட்டநாயகன் விருதை வென்றார்.