இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜன.19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை அந்த மைதானத்தில் வீழ்த்தி சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தனது பயிற்சியின் மூலம் மனரீதியாக வலிமையாக்கியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அண்டர்-19, இந்தியா ஏ உள்ளிட்ட அணிகளை வழிநடத்திய ராகுல் டிராவிட், தனது பயிற்சியின் கீழ் திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளதை யாராலும் மறுத்துவிட முடியாது. மேலும் தன்னிடம் பயிற்சி பெற்ற வீரர்களை தன்னைப் போல மனரீதியாக வலிமைப்படுத்தியுள்ளார்.
ஏனெனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைத் தழுவியும், முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியபோதும் இந்திய அணியை இளம் வீரர்கள் பொறுப்பேற்று வழிநடத்தியுள்ளனர். இதற்கான முழுக்காரணமும் ராகுல் டிராவிட்டையே சாரும்" என்று புகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு ஆரத்தியெடுத்து வரவேற்பளித்த குடும்பம்!