இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இங்கிலாந்து அணியை பதம்பார்த்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தது. இதையடுத்து, இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் பெரும் புகழைப் பெறுவதுடன், நல்ல ஊதியத்தையும் பெறுகின்றனர். முதலில் அவர்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடாவிட்டால், அவர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
எனவே அவர்கள் இங்கிலாந்திற்கு முதலிடம் கொடுத்து விளையாடி தங்களது நன்றி உணர்வையும், விசுவாசத்தையும் காட்ட வேண்டும். இதனால் நான் அவர்கள் சம்பாதிப்பதை குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் முதலில் தங்கள் நாட்டிற்காக விளையாட வேண்டும். அதன்பின் ஐபிஎல் தொடர்களில் விளையாடட்டும்“ என மிக காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் தரவரிசை: டாப் 10இல் மூன்று இந்திய வீரங்கனைகள்