மார்ச் 29ஆம் தேதி, 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கப்படவிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, ஐபிஎல் போட்டிகளை நடத்தவேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் தம்மு ரவி பேசுகையில்,'' ஐபிஎல் தொடரை நடத்தவேண்டுமா என்பதை ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் நடத்த வேண்டாம் என்பது எங்களுடைய ஆலோசனை. இறுதி முடிவை அவர்கள் தான் எடுக்கவேண்டும்'' என்றார்.
ஏற்கனவே வெளிநாட்டு பயணியர்களுக்கான இந்திய விசாவை வழங்க மத்திய அரசு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை மறுத்துவருவதால், ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ரசிகர்களின்றி போட்டிகளை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே நாளை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்பது குறித்த இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸை கிண்டல் செய்த கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு - என்.பி.ஏ போட்டிகள் ரத்து!