சமீபகாலமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அதிகளவில் பேசப்பட்டுவருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியோடு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பிசிசிஐ தரப்பில் இருந்து செய்தி வெளியாகியதாக இணையதளத்தில் பரவியது.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததது. இதனால், தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் என ஒரு சில ரசிகர்கள் நம்பத் தொடங்கினர். இது ஒருபக்கம் இருந்தாலும், தோனி ஓய்வு பெறவேண்டாம் இன்னும் சிறிது காலம் விளையாடலாம் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தனது ஓய்வு குறித்து தோனி இன்னும் அமைதி மட்டுமே காட்டிவரும் நிலையில் தற்போது அவரை சுற்றி அரசியல் பேச்சுக்களும் எழுந்துள்ளன.
இது குறித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் கூறுகையில், "தோனி எனது நண்பர். அவர் உலகப் புகழ் பெற்ற வீரர். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், நிச்சயம் பாஜகவில் இணைவார். அவரை பாஜகவுடன் சேர்ப்பது குறித்து நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இருப்பினும், அவர் ஓய்வுபெற்ற பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இந்த வருட இறுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதற்காகவே, தோனியை பாஜகவில் இணைக்கத் துடிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.