கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவம் நிலவிவரும் அசாதரண சூழல் காரணாமாக, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸுடன் இணைந்து இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது இவர்கள் இருவரும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளின் வீரர்களை கொண்டு தங்களது சிறந்த ஒருநாள் அணியை உருவாக்கியுள்ளனர். மேலும் அந்த அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனியையும் அவர்கள் நியமித்துள்ளனர்.
அவர்கள் உருவாக்கிய ஒருநாள் அணியில், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஜாக் காலிஸ், எம்.எஸ்.தோனி(கேப்டன்), யுவராஜ் சிங், யுஸ்வேந்திர சஹால், டேல் ஸ்டெயின், பும்ரா, காகிசோ ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், ‘இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இவ்விளையாட்டின் சிறந்த வீரர். அவர் எப்போதும் விளையாட்டில் பொறுமையைக் கடைப்பிடிப்பவர். அவரின் இச்செயலுக்காகவே எப்போதும் நான் அவருக்கான மதிப்பை கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கோலி, டி வில்லியர்ஸ் இருவரும் கரோனா வைரஸால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தாங்கள் பயன்படுத்திய பேட்டுகள், ஜெர்சிக்கள், கிளவுஸ்கள் ஆகியவற்றை இணையவழி ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அஸ்வினை முழுவதுமாக நம்பினார் தோனி: சுரேஷ் ரெய்னா!