இது குறித்து அவர் கூறுகையில்,
"ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியில் விளையாடிவருகிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து அணியில் இடம்பிடித்தாலும், சொதப்பலான ஆட்டத்திறனை வெளிப்படுத்துகிறார். அதேசமயம், தற்போது இருக்கும் இந்திய அணியில் தோனி தொடர வேண்டுமா என்று என்னால் கருத்துக் கூற இயலாது.
ஒருவேளை 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி இருக்க வேண்டும் என தேர்வுக்குழுவினர் விரும்பினால், அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால், தேர்வுக்குழுவினர்தான் இதைப்பற்றி இரண்டு மாதங்களுக்கு முன் முடிவெடுக்க வேண்டும்.
அதேபோல், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடிக்க வேண்டுமா அல்லது மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும். இது ஒருபக்கம் இருக்க, ஒருவேளை தோனி ஓய்வு பெற நினைத்தால் அவருக்கு முறையாக (வழியனுப்பு விழா) ஃபேர்வெல் போட்டி வைக்க வேண்டும். ஏனெனில் தோனி அதற்கு தகுதியானவர்" என்றார்.
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த வீரர்களான கங்குலி (ஒருநாள்), டிராவிட் (டெஸ்ட்), சச்சின் (ஒருநாள்), சேவாக், கம்பீர், யுவராஜ் ஆகியோருக்கு முறையாக ஃபேர்வெல் போட்டி வைக்கப்படாமலேயே, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனால், இவர்களது வரிசையில் தற்போது தோனியும் இடம்பெறுவாரா என்ற அச்சம் அவரது ரசிகர்களுக்கு தோன்றியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் தோல்விக்குப் பிறகு தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவார் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தான் பங்கேற்கவில்லை என தோனி தெரிவித்திருந்தார். அதனால், ரிஷப் பந்த் இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலும் தேர்வுக்குழுவினர் தோனிக்கு பதிலாக ரிஷப் பந்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், தோனி இனி இந்திய அணியில் இடம்பெறுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற விவாதம் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.