கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து ஹஸ்ஸி கூறுகையில், “தோனியிடம் எனக்கு மிகவும் பிடித்த திறன் தோல்வியைப் பற்றி அதிக நேரம் சிந்திக்க மாட்டார். மேலும் மற்றவர்களைப் போல் தோல்வியடைந்ததைப் பற்றி கவலை கொள்ளாமல் அடுத்தப் போட்டியில் என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். அது யாரிடத்திலும் இல்லாத மிகப்பெரும் பண்பாகும்” என்று தெரிவித்தார்.
மேலும், “ஒருவகையில் தோனியும் - ரிக்கி பாண்டிங்கும் இந்த திறனில் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் அல்ல. அது வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி இருவரின் எண்ணமும் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்த பண்பே அவரை மற்ற கேப்டன்களிடமிருந்து விலக்கிக் காட்டுகிறது. இதுவே அவர் சிறந்த வீரராக விளங்கவும் காரணமாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 விழிப்புணர்வு: காவலர்களுடன் கை கோர்த்த சாம்சன்!