இந்தியாவில் 1999, 2000ஆம் ஆண்டில் சூதாட்டப் புகார் உச்சத்தில் இருந்த காலம். இந்த சூதாட்டப் புகார் இந்திய கிரிக்கெட்டை அதள பதாளத்துக்கு தள்ள வைத்தது. குறிப்பாக, அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அசாருதின், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோனியே ஆகியோர் இந்தப் புகாரில் சிக்கி தங்களது கிரிக்கெட் வாழ்வை தொலைத்துவிட்டனர்.
இந்தப் புகாரில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று லண்டனிலிருந்து டெல்லி கொண்டுவரப்பட்டார். இவரை 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யார் இந்த சஞ்சீவ் சாவ்லா? இவருக்கும் சூதாட்டப் புகாருக்கும் என்ன தொடர்பு? எந்தெந்தத வீரர்கள் சஞ்சீவ் சாவ்லாவால் சூதாட்டப் புகாரில் சிக்கினர் என்பது குறித்து பார்ப்போம்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் சாவ்லா, 1990களில் தாவுத் இப்ராஹிமின் சூதாட்ட நிறுவனத்தில் முக்கிய புள்ளியாக விளங்கினார். தொழில்முறை பயணமாக அவர் 1996ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார். இதையடுத்து, அவரது பெயர் உலகிற்கு தெரியவந்ததே 2000ஆம் ஆண்டில்தான்.
2000ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்தின் போது ஹன்சி குரோனியே தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின்போது ஹன்சி குரோனியேவிற்கு சஞ்சீவ் சாவ்லா அறிமுகமானார். அப்போது, இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை தோல்வி அடையச் செய்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என இடைத்தரகர் சஞ்சீவ் சாவ்லா சார்பில் ஹன்சி குரோனியேவிற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு பணம் தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெல்லி காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் ஹன்சி குரோனியே சூதாட்டப் புகாரில் பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஹன்சி குரோனியே, சஞ்சீவ் சாவ்லா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சீவ் சாவ்லாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு உடனடியாக முடக்கிய நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின், 2005ஆம் ஆண்டில் இங்கிலாந்து குடியுரிமை பெற்று நார்த் லண்டனில் தனது மனைவி தீபிகா, இரண்டு மகன்மகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, இந்த புகாரில் சிக்கிய ஹன்சி குரோனியே 2002இல் விமான விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து, மத்திய அரசின் வேண்டுகொளுக்கு இனங்க பிரட்டனர் அரசு அவரை 2016இல் கைது செய்தது. கடந்த மாதம் 23ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டது.அதன் பெயரில் லண்டனிலிருந்து இன்று டெல்லி கொண்டுவரப்பட்ட அவர் 12 நாட்களில் காவல்துறையில் எடுத்து வைகக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 1990காலக்கட்ங்களில் மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சஞ்சீவ் சாவ்லாவின் உதவியோடு தாவுத் இப்ராஹிமின் டி நிறுவனத்தில் ரகிசயமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.
இந்த சூதாட்டப் புகாரில் முக்கிய நபராக செயல்பட்டுவந்த சஞ்சீவ் சாவ்லாவிடம் கேள்விகள் கேட்பதில் எதிர்நோக்கி இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜய் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல் துறையினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியில்தான் பேச வேண்டும் - கட்டளையிட்ட குஜராத் வர்ணனையாளர்