ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை - சென்னை அணிகள் மோதவுள்ளன. கொரோனா வைரஸால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும், இதில், பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி அணிக்காக ஓப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி அணி இவரை ரூ 1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடருக்குபின் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் தன்னை தயார் படுத்திகொள்வதற்காகவே இந்த முடிவை தான் எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இவர் தனது முடிவை டெல்லி அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததால், இவருக்கு பதிலாக மாற்று வீரரை அந்த அணி தற்போது தேடிவருகிறது.
ஏற்கனவே டெல்லி அணிக்குழுவில் இடம்பெற்றிருந்த இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடன் மோதவுள்ளது. இப்போட்டி டெல்லியில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: 5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட தல... ஐபிஎல்லுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!