ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் வாரத்தில் நிறைவுபெறும். பிக் பாஷ் டி20 தொடர் நடைபெறும் அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். குறிப்பாக, இந்த டெஸ்ட் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இதனால், வார்னர், ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய அணியின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாட முடியாத சூழல் இருந்துவருகிறது. அதேசமயம், டெஸ்ட் போட்டிகள் இல்லாத நேரங்களில் வீரர்கள் பிக் பாஷ் டி20 தொடரிலும் விளையாடிவந்தனர்.
இந்நிலையில், மீண்டும் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடுவீர்களா என்ற கேள்வி டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வார்னர், ”தற்போதைய நிலைமை சரியான பிறகு சர்வதேச கிரிக்கெட் அட்டவணைகளைப் பொறுத்துதான் பிக் பாஷ் டி20 தொடரில் என்னால் பங்கேற்க முடியுமா, முடியாதா என்று பதிலளிக்க முடியும் .
நிச்சயம் அடுத்தடுத்த நாள்களில் டெஸ்ட், டி20 என இரண்டு விதமான போட்டிகளில் மாறி மாறி விளையாட முடியாது. கடந்த காலங்களில் வேண்டுமானால் நான் அப்படி விளையாடி இருக்கலாம். ஆனால், இனி அவ்வாறு செய்ய மாட்டேன். அதற்கு முக்கியக் காரணமே ஃபார்மெட்டிற்கு ஏற்றவாறு உடனடியாக மனநிலையை மாற்ற முடியவில்லை” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரா விராட் கோலியா?... கம்பீர் பதில்