கோவிட் -19 தொற்று சீனாவில் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் இதுவரை கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், மறுப்பக்கம் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் அயராது உழைக்கின்றனர். இந்நிலையில், கோவிட் 19 தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மொட்டையடித்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் சக வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், இந்திய அணியின் கேப்டன் கோலி ஆகியோரையும் மொட்டையடிக்கும் படி சவால் விடுத்துள்ளார். மருத்துவப் பணியாளர்களைக் கெளரவிக்கும் வகையில் வார்னர் மொட்டையடித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 தொற்றால் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.