ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடுமையான காட்டுத் தீ நிலவிவருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மாகாணங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 700க்கும் அதிகமான வீடுகள் இரையாகியுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் காட்டுத் தீ குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் உள்ள புகைப்படத்தில் ஒரு ஆண் தனது நாய்க்குட்டியுடன் அமர்ந்து காட்டுத்தீயை வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அந்த புகைப்படத்தோடு, 'இந்த புகைப்படம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாங்களும், நியூசிலாந்து அணியினரும் நாளை பாதுகாப்புடன் கிரிக்கெட் ஆடப்போகும் வாய்ப்பை மறக்கவே மாட்டேன். எனது ஆதரவும், எனது குடும்பத்தின் ஆதரவும் எப்போதும் இருக்கும். இந்த காட்டுத் தீயைப் பற்றி வார்த்தைகளால் கூறமுடியாது.
இந்த தீயை அணைக்கப் போராடும் ஒவ்வொரு தீயணைப்பு வீரரும், தன்னார்வலர்களும், அவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் எப்போதும் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். நீங்கள் தான் எங்களுடைய உண்மையான ஹீரோக்கள். உங்களால் நாங்கள் பெருமைகொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடவுள்ள டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கைகளில் கருப்பு பேண்ட் அணிந்து ஆடவுள்ளனர்.
மேலும் இந்த காட்டுத் தீயின் வழியாக ஏற்பட்ட புகையினால் கடந்த மாதம் பிக் பாஷ் லீக்கில் நடக்கவிருந்த ஒரு போட்டி ரத்தானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 150 வீடுகள் எரிந்து சேதம் - 2 நபர்கள் உயிரிழப்பு!