கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் வீரர்கள் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அதில் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னரிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே நடத்திய நேர்காணலில் பங்கேற்றார்.
அதில் ஹர்ஷா போக்லே ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வார்னரிடம் தேர்வு செய்யக் கூறினார். அதில், தொடக்க வீரர்களாக தன்னையும், ரோஹித் ஷர்மாவையும் தேர்வு செய்தார். மூன்றாவது நிலைக்கு விராட் கோலியும், நான்காவது வீரராக சுரேஷ் ரெய்னாவையும் தேர்வு செய்தார்.
ஐந்தாவது மற்றும் ஆறாவது நிலைக்கு முறையே ஹர்திக் பாண்டியா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரையும், ஏழாவது வீரராக சிஎஸ்கே கேப்டன் தோனியையும் தேர்வு செய்தார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஸ்டார்க், பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோரை தேர்வு செய்தார். 11ஆவது வீரராக குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்வேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வார்னர், தனக்கும் விராட் கோலிக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றி கூறினார். ”அது என்னவென்றால், நாங்கள் இருவரும் ஒரே அணியில் ஆடினால் இருவருக்குள்ளும் இருக்கும் கிரிக்கெட் மீதான வேட்கையே எங்களை வழிநடத்திச் செல்லும். எப்போதும் எதிரணியில் எந்த வீரர் அதிக ரன்கள் சேர்க்கிறார் என்று பார்த்து, அவரைவிட அதிக ரன்கள் சேர்க்க விரும்புவேன்” என்றார்.
இதையும் படிங்க: முரளி விஜய்-க்கு பதில் கொடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி...!