கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டடுள்ளன. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள், தங்களது நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளங்களிலேயே செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் பொம்மி பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலை மூலம் நேர்காணலில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மில்லர் தனது ஐபிஎல் பயணம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய மில்லர், 'ஐபிஎல் தொடருக்கான எனது முதலாவது ஏலத்தின் போது நான் ஏலம் எடுக்கப்படாமல் இருந்தேன். இதையடுத்து, ஐபிஎல் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக கிங்ஸ் லெவன் அணியிலிருந்து எனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம், எங்களது அணியில் விளையாடுவதற்காக உங்களை நாங்கள் ஏலம் எடுத்துள்ளோம், அதனால் நீங்கள் இங்கு வாருங்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, நான் இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றேன். அது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயணமாக மாறியது. முதலில் அவர்கள் என்னை ஒருவருடத்திற்கு மட்டுமே ஏலத்தில் எடுத்திருந்தனர். ஆனால் அந்த சீசனுக்கு பிறகு, என்னை பஞ்சாப் அணி அடுத்த இரண்டு சீசன்களுக்கு எனது ஆரம்ப விலையிலேயே ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்தது.
என்னுடைய முதல் சீசனின் போது ஆடம் கில்கிறிஸ்ட் எனது கேப்டனாக இருந்தார். அவரின் அறிவுறுத்தலை பின்பற்றி நடந்ததால் முதல் சீசனில் மூன்று போட்டிகளிலும், இரண்டாவது சீசனிலிருந்து அணியின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடிந்தது. மேலும், பெங்களூரு அணிக்கெதிராக எனது சதமும் பூர்த்திசெய்யப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு சீசன்களாக பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த மில்லர், இதுவரை 79 போட்டிகளில் பங்கேற்று 1850 ரன்களை குவித்துள்ளார். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உமிழ் நீர் தடை பந்துவீச்சாளர்களின் தரத்தை மேம்படுத்தும்: ஜோ ரூட்...!