அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே 25ஆம் தேதி கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. உலகின் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடியபோது தானும், இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேராவும் இனவெறிக்கு ஆளானதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் நானும், திசாரா பெரேராவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது, சிலர் எங்களை நோக்கி ’கலு’ என அழைத்தனர். அப்போது அதற்கான அர்த்தம் கறுப்பினத்தைச் சேர்ந்த வலுவான நபர் என நினைத்திருந்தேன். ஆனால் அவை கறுப்பினத்தவரை கிண்டல் செய்து கூறப்பட்ட வார்த்தை என்பது தற்போது தெரிந்துகொண்டு மிகவும் வேதனையடைந்தேன்" என்றார்.
மேலும் இதுதொடர்பாக ஐசிசிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்த அவர், "என்னைப் போன்று மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு நடக்கும் அநீதியை, ஐசிசியும் மற்ற கிரிக்கெட் வாரியங்களும் பார்ப்பதும் இல்லை தட்டிக்கேட்பதும் இல்லை. அமெரிக்காவில் மட்டும் இனவெறித் தாக்குதல்கள் நடப்பதில்லை. உலகம் எங்கும் நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது அமைதியாக இருப்பதற்கான நேரமல்ல" என்று கூறியிருந்தார்.