வங்கதேச அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்கேவெல்ட்டையும் குறுகிய கால சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியையும் நியமிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள வங்கதேச அணியின் பயிற்சியாளர் கர்ட்னி வால்ஷுக்குப் பதிலாக முன்னாள் தென்னாப்ரிக்க வீரர் லாங்கேவெல்ட் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நவம்பர் மாதம் வங்க தேசத்தின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பொறுப்பேற்று 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை முடியும் வரை அப்பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளது.
இது குறித்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், "நாங்கள் லாங்கேவெல்ட்டுடன் பேசிய பிறகு தனது சேவையை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இங்கு வந்த பிறகு, ஒப்பந்தம் தொடர்பான அனைத்து முறைகளையும் நாங்கள் உறுதி செய்வோம்.
வெட்டோரி இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் எங்களது கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் 100 நாட்களுக்கு மட்டுமே இப்பதவியில் நீடிப்பார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக வங்க தேசத்துடன் தனது பணியைத் தொடங்குவார்" என்று தெரிவித்தார்.