கிரிக்கெட்டில் எப்போதுமே பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களே அதிகமாகக் கொண்டாடப்படுவார்கள். ஆனால் வேகப்பந்துவீச்சாளருக்கான முக்கியத்துவமும், மரியாதையும் ரசிகர்களிடம் எப்போதும் இருக்கும். தற்போதைய சூழலில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை சர்வதேச ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இங்கிலாந்தின் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, இந்தியாவின் பும்ரா, ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் என சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் இங்கிலாந்து சென்சேஷன் ஆர்ச்சர்.
இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்ச்சர், ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் உடன் நடத்திய கிரிக்கெட் போரை உலகமே வியந்தது. மிகச்சிறந்த போட்டியாளர்கள் களத்தில் மோதிக்கொண்ட காட்சிகள் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது. இதையடுத்து ஆர்ச்சரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஆர்ச்சர் பற்றி டேல் ஸ்டெயின் வியந்து பேசியுள்ளார்.
அதில், ''கிரிக்கெட் விளையாட்டிலேயே மிகவும் கடினமானது என்னவென்றால் வேகப்பந்துவீச்சாளராக இருப்பது தான். ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஒவ்வொரு பந்து வீசுவதற்கும் பெரிய மெனக்கெடலை வெளிப்படுத்தவேண்டும். ஆஸ்திரேலியாவின் ஜான்சன், ஸ்டார்க் என முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் பந்தை வேகமாக வீசுவதற்காக சரியான ஓட்டத்தை முன்னெடுப்பார்கள்.
ஆனால் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சரோ எந்தவிதமான ஓட்டமும் இல்லாமல் மிகச்சிறந்த வேகத்தில் வீசுகிறார். அது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும். ஒரு பேஸ்மேனாக ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும்போது கடினமாக உணர்வார்கள். அவருடைய நிதானமான ஓட்டத்தால் என்ன மாதிரியான பந்தை ஆர்ச்சர் வீசப்போகிறார் என்பதை சிறிதளவு கூட பேட்ஸ்மேன்களால் கணிக்க இயலாது.
சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் புதிதாக வந்துள்ளதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் முதன்மை காயம் தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து ஆர்ச்சருடன் ஆலோசனை செய்யவேண்டும். அவருடைய வேலைப்பளுவை குறைக்கவேண்டும். மக்கள் அவரது பந்துவீச்சால், கிரிக்கெட்டை ரசித்துவருகிறார்கள். மிகப்பெரிய இடத்திற்கு அவர் வருவார்'' என்றார்.
இதையும் படிங்க: ஆஷஸ் கிரிக்கெட்: ஆர்ச்சரை எங்கேயோ கொண்டுபோயிடுச்சுல்ல