இந்தியா-வங்கதேச அணிகள் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
இப்போட்டியின்மூலம் இரு அணிகளும் முதன்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றன. இதனால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளது. இப்போட்டியின் தொடக்க விழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் வரவுள்ளனர். அவர்கள் தவிர்த்து பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்களும் இப்போட்டியில் கவுரவிக்கப்படவுள்ளனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அங்கு காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவல்துறையினர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சிலர் பிளாக்கில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக ஆறு பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 40 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.