கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்சமயம் ஒரு சில கால்பந்து தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.
இதனால் ஐபிஎல் தொடரையும் பார்வையாளர்களின்றி நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்தினால் வீரர்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில், "எனது அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டபோது, இந்தாண்டிலேயே ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாட நான் மிகவும் ஆர்வமாக இருப்பதால், அத்தொடர் விரைவில் நடைபெற வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் நடத்தப்பட்டால், அது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு சாதகமானதாக அமையும். ஏனெனில் கடந்த சில மாதங்களாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் நாங்கள் பங்கேற்காததால், ஐபிஎல் அதற்கு ஒரு மாற்றாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலம், இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெயரையும் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:கால்பந்துலயே ஊறிப்போனவனால மட்டும் தான் இப்படியும் மாஸ்க் செய்ய முடியும்!