கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக 3டி கிரிக்கெட் என்ற புதிய வகை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3டி கிரிக்கெட் தொடரில் டி வில்லியர்ஸ், ரபாடா, டி காக் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த வகை கிரிக்கெட் போட்டியில் 8 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 36 ஓவர் கொடுக்கப்படும்.
இதில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு 6 ஓவர்கள் வீசப்படும். இதையடுத்து பந்துவீசும் அணி பேட்டிங்கில் களமிறங்க வேண்டும். அவர்களுக்கும் 6 ஓவர்கள் வீசப்படும். இதையடுத்து மூன்று அணிகளும் 6 ஓவர்கள் என மொத்தமாக 18 ஓவர்கள் ஆடியிருப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எந்த அணி எடுக்கிறதோ, அந்த அணிக்கு மீண்டும் பேட்டிங் வழங்கப்படும். முதல் பாதியில் ஆட்டமிழக்கும் பேட்ஸ்மேன்களுக்கு இரண்டாம் பாதியில் வாய்ப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு 12 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து வழங்கப்படும். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கும் 3 ஓவர்கள் மட்டுமே.
இந்தப் புதிய வகை கிரிக்கெட் தொடர் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பங்குதாரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.