காவல்துறையிடம் மக்கள் அளிக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, அதுகுறித்து புகார்தாரர்களிடம் கருத்து கேட்க திருப்பத்தூர் காவல்துறையினர் ஃபிட்பேக் செல் என்று தனிப்பட்ட பிரிவு ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்தப் பிரிவானது புகாரளிக்கப்பட்ட அடுத்த மூன்று நாள்களுக்குப் பிறகு புகாரளித்தவரை தொடர்பு கொண்டு, காவல்துறை சார்பில் இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பதிவு செய்கிறது. பின்னர் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அதனை ஆய்வு செய்யும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறது.
இது தொடர்பாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விளக்க வீடியோவுக்கு இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டனுமான சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர், இந்த நடவடிக்கை காவல்துறையினரின் சேவைகளை மேலும் செம்மைப்படுத்துவதோடு, மக்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.