எப்போதும் பரபரப்பாக அடுத்த கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய வீரர்களுக்கு கரோனா வைரஸால் பல நாள்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஓய்வு நாள்களை அவர்கள் எவ்வாறு செலவழித்து வருகிறார்கள் என்று கிரிக் இன்ஃபோ (cricinfo) இணையதளத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
அதில், எப்போதும் பயிற்சிகளைத் தொடங்கும்போது ஐபிஎல், டெஸ்ட் தொடர், டிஎன்பிஎல் தொடர் என ஏதாவது ஒரு தொடரை மனதில் வைத்துதான் தொடங்குவோம். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. புதிய புத்துணர்வுடன் பயிற்சி செய்துவருகிறேன். எவ்வித பதற்றமும் இல்லாமல் எனது ஆட்டத்தை ரசிக்கிறேன்.
குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறது. குடும்பமாக அமர்ந்து உணவருந்துகிறோம். எனது மனைவி சில தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துவருகிறார். நான் இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி வாழ்க்கைத் தொடரான 'குயின்' வெப் சீரிஸைப் பார்த்துவருகிறேன். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை வாசித்துவருகிறேன். அந்த புத்தகம் ஐந்து பாகங்களைக் கொண்டது என்பதால், இந்த ஓய்வு நாள்களில் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: துணி துவைத்து, கழிவறையை சுத்தம் செய்யும் தவான்...!