இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு இறுதியில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவிருந்தது. ஆனால் திடீரென கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் திட்டமிட்டபடி இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கான அட்டவணையை நேற்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா இறுதி செய்யதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி பிரிஸ்பேனிலும், டிசம்பர் 11ஆம் தேதி அடிலெய்டிலும், மெல்போர்னில் நடக்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதியும், ஜனவரி 3ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டியும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை செயலாளர் கெவின் ராபர்ட்ஸ் நாளை அறிவிப்பார் எனவும் அந்நாட்டு நாளிதழ்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையில் அடிலெய்டில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி ஒத்துக்கொண்டுள்ள நிலையில், நிச்சயம் இரண்டாவது போட்டி பகலிரவு போட்டியாகவே நடக்க வாய்ப்புள்ளது.
இந்த அறிவிப்போடு சேர்த்து 2020-21ஆம் சீசனுக்கான ஆஸ்திரேலிய அணியின் அட்டவணையும் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒரே மைதானத்தில் தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - அக்தர்!