கரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்துக்கு இடையே புகழ் பெற்ற டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்த 33 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இத்தொடரில் விளையாடவிருக்கும் போட்டிகள் அனைத்தும் டரொபாவிலுள்ள பிரெயன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்திலும், குயின் பார்க் ஓவல் , போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் சீசனுக்கான முதல் போட்டி கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த கயானா அமேசான் வாரியார்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
கரோனா அச்சம் காரணமாக இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் கதவுகள் மூடப்பட்டு, உடல் பாதிப்பு ஏற்படாத உயிர் பாதுகாப்பு சுற்றுச்சூழல், கடுமையான பாதுகாப்பான நெறிமுறைகளுடன் நடத்தப்படும் என்று கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎல் தலைமை செயல் நிர்வாக அதிகாரி டேமின் ஓ டெனோஹா கூறுகையில்,
இந்த ஆண்டு முற்றிலும் மாறுபட்ட சிபிஎல் தொடராகவும், தரத்திலும் மாறுபட்டதாகவும் அமைந்திருக்கும். மிக நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் விளையாட்டு தொடர்கள் மெல்ல தொடங்கிவருகின்றன. இத்தொடர் மீதான ரசிகர்கள் காட்டும் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர்வரை நடைபெறவுள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் இத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஎல் திருவிழா நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: 2023 உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கான சூப்பர் லீக் போட்டிகள் அறிமுகம்!