ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வெளியிட்ட அட்டவணைப்படி இதன் 13ஆவது சீசனின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்க வேண்டியது. தொடரின் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவிருந்தன.
இதனால், வழக்கத்தை விட இம்முறை ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்னர். அதற்கு முக்கிய காரணமே தல தோனியின் கம்பேக்தான். கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த அவர், ஐபிஎல் தொடரில் ரீஎன்ட்ரி தரவிருந்தார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னையில் மார்ச் மாத தொடக்கத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டார். இதனிடையே, ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்திறனை வைத்து அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருவதால் இந்தத் தொடர் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது. மேலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 14வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய சூழலில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான்.
நேற்று ஐபிஎல் தொடர் நடைபெறும், தோனி கம்பேக் தருவார் என மிகவும் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு கரோனா வைரஸ் சூழலால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஒருவேளை நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் தோனி மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பெறுவது சற்று கடினம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தோனிதான் கேப்டன்... இதுதான் வாசிம் ஜாஃபரின் சிறந்த ஐபிஎல் அணி!