இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை இந்தியாவில் 433 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கும் கோவிட்-19 வைரஸ் மூன்றாம் நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்று எளிதாகப் பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோவிட்-19 வைரசால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை Lets Stay indoors India என மாற்றியுள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. கோவிட்-19 வைரஸ்ன் பாதிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும். இந்தியா அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பாலைவனமாகத் தான் காட்சியளிக்கும். நாம் சரியான வழிமுறையைப் பின்பற்றாவிட்டால் பெரும் விளைவைச் சந்திக்க நேரிடும். அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தகவல் கிடைக்காத இடங்களில் வசித்துவருவதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 'அவங்கள பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - கடுப்பான கவுதம் கம்பிர்