சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்களிடையை பெரும் பீதியை கிளப்பியுள்ள இந்த கோவிட் -19 வைரஸால் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது.
அதேசமயம், இந்த கோவிட் -19 வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி கூறுகையில், "கோவிட் -19 வைரஸ் தொற்றால் தற்போதைய சூழ்நிலையை டி20 உலகக்கோப்பை தொடரை நிர்வாகக் குழு தீவிரமாக கண்காணித்துவருகிறது. அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் நவம்பர் 15ஆம் தேதி முடிவு பெறுகிறது.
அதனால், நாங்கள் திட்டமிட்டப்படியே இந்தத் தொடர் நடைபெறும் என நம்பிக்கை உள்ளது" என கூறப்பட்டது. இந்த உலகக்கோப்பைத் தொடர் மெல்போர்ன், சிட்னி, பெர்த், அடிலெயிட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட் ஆகிய ஏழு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
அண்மையில் மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்க்கவந்த 86, 174 ரசிகர்களில் ஒருவருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பீதி: பிஎஸ்எல் தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டி ஒத்திவைப்பு!