ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 19ஆம் தேதி கல்லேவில் தொடங்கவுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி, இதர நாடுகளையும் அச்சுறுத்திவருவதால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, எங்கள் அணி வீரர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொற்றியதால், ஒருவருக்கு ஒருவர் சற்று இடைவெளியுடன் இருக்க முடிவு செய்துள்ளோம். தொற்று நோய் வராதவாறு தொடர்ந்து எங்கள் கைகளை தண்ணீரில் கழுவிக்கொள்கிறோம். மேலும், பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பான்களை பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்கிறோம்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் முடிவடைந்தபின் அந்நாட்டு வீரர்களுடன் நாங்கள் ஹேண்ட் ஷேக் செய்ய மாட்டோம். அதற்குப் பதிலாக கைகளைக் குத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: கொரோனாவால் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ள குமரி விவசாயிகள்
!